விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
Published on

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டியில் விறுவிறு என வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்த நபர் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிகுடிசை என்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com