விக்கிரவாண்டி தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பண பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் தி.மு.க. புகார் மனு

விக்கிரவாண்டி தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணபட்டுவாடாவில் ஈடு படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் மனு அளித்து உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பண பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் தி.மு.க. புகார் மனு
Published on

சென்னை,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.கிரிராஜன் மற்றும் தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து ஆர்.கிரிராஜன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அதிகமான பணத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று சட்டவிரோதமாக வினியோகம் செய்கின்றனர்.

இந்தபணியில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றும் 9 அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய செயல்பாட்டை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த அதிகாரிகள் தங்கள் பணி இடத்தை விட்டு வெளியேறவும் விக்கிரவாண்டி தொகுதிக்குள் நுழையவும் தடை விதிக்க வேண்டும்.

அத்துடன் விக்கிரவாண்டி தொகுதிக்குள் நுழையும் அனைத்து நெடுஞ்சாலைத்துறை வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட வேண்டும். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com