விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர்.
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை
Published on

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை 30ம் தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

மீண்டும் மனு

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

விடுதலை

இந்நிலையில், ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட மார்க்கண்டேயனை திமுகவினர் வரவேற்றனர்.

மார்க்கண்டேயன் பேசியது என்ன?

மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை என மார்க்கண்டேயன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com