

நாகர்கோவில்,
விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், புகாரை பெறுவதில் அலட்சியம் காட்டியதாக பெண் இன்ஸ்பெக்டர் கட்டாய பணி ஓய்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 10-3-2026 அன்று அரசு பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பி வரவில்லை.
எனவே அவரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். மறுநாள் மாலையில் மாணவி காட்டுப்பகுதியில் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், "மாணவி மாயமானது குறித்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது, அங்கு விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்குமாறு கூறினர். எனவே அங்கு புகார் அளிக்க சென்றபோது, குளத்தூர் போலீசில் புகார் கொடுக்குமாறு விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீனா மற்றும் போலீசார் திருப்பி அனுப்பி அலைக்கழித்தனர். போலீசார் துரித நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை உயிருடன் மீட்டு இருக்கலாம்" என்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (வயது 37) என்பவரை போலீசார் கடந்த 19-3-2026 அன்று கைது செய்தனர். பிரபல ரவுடியான இவர் ஏற்க னவே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தபோது பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்கா ரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 25-5-2026 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதற்கிடையே புகார் அளிக்க வந்த மாணவியின் பெற்றோரை அவமதித்து அலட்சியபடுத்தியதாக புகார் கூறப்பட்ட விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா குமரி மாவட்டம் மண்டைக்காடு போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் பிரவீனாவை கட்டாய பணி ஓய்வு செய்து உத்தரவிட்டுள்ளார்.