ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

வந்தவாசியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
Published on

வந்தவாசி

வந்தவாசியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டா பெயர் மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 47), இவர் காஞ்சீபுரம் மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த கோவூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில்மென்டாக கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த நிலத்துக்கான பட்டா இவரது பெயரில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதில் 36 சென்ட் மட்டும் இவருக்கு தெரியாமலேயே வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த எல்லம்மாள் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பட்டாவை மீண்டும் எல்லம்மாள் பெயருக்கு மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று எல்லம்மாளிடம் தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால் கேட்டுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் எல்லம்மாள் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்த தனபாலிடம் இன்று மாலை எல்லம்மாள் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருவேல்முருகன் தலைமையிலான போலீசார் தனபாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com