ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

எருமப்பட்டி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
Published on

எருமப்பட்டி

ரூ.3 ஆயிரம் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் முருகேசன் (வயது 21). இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டர். மேலும் இவருக்கு பூர்வீக சொத்தாக 1 ஏக்கர் தோட்டம் உள்ளது. அதில் 1 ஏக்கர் தோட்டத்திற்கு பட்டா மாறுதல் வாரிசு அடிப்படையில் செய்துவிட்டார்.

மேலும் ஏக்கர் இடத்திற்கு வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். 10 நாட்கள் ஆகியும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் இருந்ததால் புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்யப்படும் என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை முருகேசனிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலர் குமரவேலிடம் தருமாறு அனுப்பினர். பணத்தை வாங்கிய முருகேசன், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

அங்கு குமரவேல் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை முருகேசனிடம் இருந்து வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் குமரவேலை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர்.

இதற்கு முன்பு இவர் போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 3 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் என்பதும், தற்போது புதுக்கோட்டை ஊராட்சியில் 8 மாதங்கள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com