அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் - கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் - கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1998-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதியிட்ட ஊரக வளர்ச்சித்துறை அரசாணையின்படி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும். அதற்காக 2-ந்தேதி (நாளை) கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்கள் கலந்துகொள்ள ஏதுவாக, கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா காலகட்டம் என்பதால் இந்த கூட்டம் நடத்தப்படும்போது சில வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் நடக்கும் பொது இடம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வந்தால் அந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாளில் கலெக்டரின் அனுமதியுடன் நடத்தலாம்.

கொரோனா தொற்றுக்கான காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மக்கள், தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம். வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர் கூட்டத்துக்கு வரவேண்டாம். பாதுகாப்பான பொது வெளி அல்லது காற்றோட்டம் உள்ள கட்டிடங்களில், கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்த பிறகு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். உடல் வெப்பத்தை அறியும் வசதி, சானிடைசர், சோப்பு போட்டு கைகழுவும் வசதி இருக்க வேண்டும்.

அனைவரும் முக கவசத்துடன் பங்கேற்க வேண்டும். ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளிவிட வேண்டும். கோலப்பொடியுடன் அமரும் இடத்தை அடையாளமிடலாம். கொரோனா தொற்று தொடர்பாக சிரமம் ஏற்பட்டால் கலெக்டரின் அறிவுரைப்படி மற்றொரு நாளில் கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி அறிவிக்கலாம். கூட்டத்திற்கு முன்பு உறுப்பினர்களின் வருகை வரம்பின்படி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com