

சேலம்,
பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (45 வயது). இவர், அந்த பகுதியில் இறைச்சி மற்றும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது தந்தை பெயரில் உள்ள 6 சென்ட் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பணம் கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார், ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் ரூபாயை ராமமூர்த்தியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் தருமாறு கூறினர். அதன்படி, அவர் செக்கடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கிராம உதவியாளர் மாதவன் மூலம் சரவணனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.