கிருஷ்ணகிரி அருகே, தீயசக்திகளால் தொடர் மரணங்கள் ஏற்படுவதாக கிராமத்தை காலி செய்து வனப்பகுதியில் குடியேறிய மக்கள்

கிருஷ்ணகிரி அருகே, தீயசக்திகளால் தொடர் மரணங்கள் ஏற்படுவதாக கிராமத்தை காலி செய்து வனப்பகுதியில் குடியேறிய மக்கள்
Published on

கிருஷ்ணகிரி அருகே தீயசக்திகளால் தொடர் மரணங்கள் ஏற்படுவதாக கூறி கிராமத்தை காலி செய்த மக்கள் வனப்பகுதியில் குடியேறிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

தொடர் மரணங்கள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்குட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவுசெய்தனர்.

அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் மண்டு மாரியம்மன், முத்து மாரியம்மன், செல்லி மாரியம்மன் ஆகிய கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.

பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

தீயசக்திகள்

இதுகுறித்து அந்த கிராம மக்கள் சிலர் கூறியதாவது:-

21 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எங்கள் கிராமத்தில் துர்மரணம் அதிகளவில் ஏற்பட்டது.

இதனால் கிராமத்தில் பேய், காத்து கருப்பு போன்ற தீயசக்திகள் புகுந்துள்ளதால் தான் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதி, அந்த தீய சக்திகளை விரட்ட நாங்கள்மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளையும் அழைத்து கொண்டு ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறினோம்.

ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு மாலை வீடு திரும்பி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com