கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி

பள்ளி மாணவ-மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கண்ணப்பாடி கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, கண்ணப்பாடி கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் சிலருடன் கலெக்டா அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 25 பேர் அருகே நத்தக்காடு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கேலி கிண்டல்

கடந்த சில மாதங்களாக அவர்கள் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது நத்தக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கஞ்சா மற்றும் மது போதையில் மாணவ-மாணவிகளை கேலி கிண்டல் செய்து, கற்களை விட்டு ஏறிந்து, தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நத்தக்காடு கிராம முக்கியஸ்தவர்களிடம் கூறினோம். அவர்கள் அந்த இளைஞர்களை கண்டித்து அறிவுரை கூறியும், அவர்கள் திருந்தவில்லை. இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கண்ணப்பாடி கிராம பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊரைச் சேர்ந்த 2 பேரை நத்தக்காடு இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

கைது செய்ய வேண்டும்

மேலும் அவர்கள் எங்கள் ஊர் தெருவுக்குள் வந்து வீடுகளின் வெளியே உள்ள பாத்திரங்கள், இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் காலதாமதமாக வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்கள் மாணவ-மாணவிகளை நத்தக்காடு பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர்களின் படிப்பிற்கு இடையூறாக இருக்கும் நத்தக்காடு இளைஞர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது அவர்களிடம் போலீசார் மேற்கண்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இ-பட்டா வழங்க கோரி...

ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராம பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 22-ந் தேதி எங்களுக்கு பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு கடிதம் வந்துள்ளது. அதில், எங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவுக்கு இ-பட்டா வழங்கும் நடவடிக்கைக்காக கள விசாரணை செய்யப்பட்டதில் இன்னும் வீடு கட்டப்படவில்லை என்பதால் இன்னும் 15 நாட்களுக்குள் அசல் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். ஆஜராகவில்லையென்றால் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்படும், என்று கூறப்பட்டிருந்தது. எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவில் வீடு கட்ட முடியவில்லை. எனவே இ-பட்டா வழங்கவும், வீடு கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த ராகவன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகளை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதே போல் வேப்பந்தட்டை தாலுகா, எறையூரை சேர்ந்த வினேஷ் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெருந்தலைவர் காமராஜர், கக்கன் ஆகியோரின் பெரும் முயற்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கத்தை முறையாக சீரமைக்கவும், மேலும் அந்த நீர்த்தேக்கத்திற்கு கோனேரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

உடனடி நடவடிக்கை

லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரெங்கராஜ் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மூன்று சக்கர சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவினை பெற்று கொண்ட கலெக்டர் கற்பகம் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். சைக்கிளை பெற்று கொண்ட மாற்றுத்திறனாளி ரெங்கராஜ் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 293 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com