இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

நத்தம் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
Published on

நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சியில் நல்லகண்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சின்ன அய்யனார் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று இருந்தது. இந்த காளை வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் மாலை இறந்தது. தொடர்ந்து இறந்த கோவில் காளையின் உடல் அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டது. பின்னர் கோவில் காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களும் நீண்ட வரிசையில் வந்து கோவில் காளைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்த கோவில் காளையானது கொசவபட்டி, தவசிமடை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னர் காளையின் உடலை மேள, தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவிலின் அருகே உள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கோவில் காளை இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com