செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பிரம்மதேசம் அருகே செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
Published on

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள தலைக்காணிகுப்பம் கிராமத்தில் 220 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் தலைக்காணிகுப்பத்தில் செம்மண் குவாரி அமைக்க சிவகங்கை பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கு விழுப்புரம் மாவட்ட கனிமவளத்துறை அனுமதி வழங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நேற்று தலைக்காணிகுப்பத்தில் செம்மண்குவாரி அமைக்க பொக்லைன் எந்திரங்கள் மூலம் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள், இங்கு குவாரி அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் குறையும். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாய பணிகளும் பாதிக்கப்படும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கு செம்மண் குவாரி அமைக்கக்கூடாது என கூறினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர்அன்பரசு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், செம்மண் குவாரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெறுவதற்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு குத்தகைத்தாரர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து குவாரி அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறிவிட்டு ஒப்பந்ததாரர் அங்கிருந்து சென்றார். அதனை தொடர்ந்து கிராம மக்களும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com