கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நில அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்

கார்த்திகேயபுரம் ஊராட்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் குடியிருப்பு சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நில அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில் 4 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக சுடுகாடு, கங்கை அம்மன் கோவில், மஞ்சுவிரட்டும் இடமாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் பெறாமல் அலுவலர்கள் குடியிருப்பு சங்கத்திற்கு திருத்தணி வருவாய்த்துறை மூலம் மேற்கண்ட இடத்தில் 87 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது எதிர்த்து பல்வேறு சட்ட போராட்டங்களை கார்த்திகேயபுரம் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த இடத்தை மீட்டுத் தருமாறு முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. உள்ளிட்டவர்களிடம் கார்த்திகேயபுரம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் குடியிருப்பு சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை அளவீடு செய்து தருமாறு சங்கத்தின் தலைவர் நாகராஜன் என்பவர் திருத்தணி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று கார்த்திகேயபுரம் ஊராட்சியில் உள்ள அந்த இடத்தில் நில அளவீடு பணி மேற்கொள்வதற்காக மண்டல துணை தாசில்தார் ரீட்டா, வருவாய் ஆய்வாளர் கமல், கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் வந்தனர். வருவாய்த் துறையினர் வருவதை அறிந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து மனுதாரர் நாகராஜன் வரவில்லை எனக்கூறி வருவாய்த் துறையினர் நில அளவீடு பணி மேற்கொள்ளாமல் அங்கிருந்து சென்றனர்.

அசம்பாவிதங்களை தடுக்கப் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com