

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வரகனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது வையக்கவுண்டன்பட்டி. இந்த கிராமத்தில் புகழ்பெற்ற முப்பிடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் கொடைவிழா நடைபெறும். இந்தநிலையில் கொடை விழா சம்பந்தமாக கிராம மக்களின் ஒரு தரப்பினர் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டனர்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு மற்றும் பொதுமக்கள் நேற்றிரவு சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். துணை சூப்பிரண்டு சுதீர் கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோவில் கொடை விழா நடத்துவது சம்பந்தமாக இன்று (சனிக்கிழமை) கிராமமக்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து கிராமமக்கள் கலந்து சென்றனர்.
இதுபற்றி கிராம மக்கள் கூறும்போது, போலீசாரிடம் அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரை சென்று பாருங்கள் என்று கூறினர். இதனால் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டோம், என்றனர்.