

சென்னை,
பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் கிராமங்களுக்கு பசுமைப் பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் பாதுகாப்பிற்காகப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து, அமைதியான தீபாவளியைக் கொண்டாடும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்களாக, சிவகங்கை மாவட்டத்தில் வேட்டங்குடிப்பட்டி மற்றும் கொல்லுக்குடிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் வ.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவளி, செம்மாண்டம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி மற்றும் கருக்கங்காட்டுவலசு, செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் மற்றும் இது போன்ற கிராமங்கள் பிற மாவட்டங்களிலும் உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுதல் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இக்கிராம மக்கள் பின்பற்றி வரும் முன்னுதாரணமான நடைமுறைகள், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
இக்கிராமங்கள் ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் இக்கிராமங்களில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கவும், நாட்டு மர வகைகளை வளர்க்கவும், சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
ஒரு முறை பயன்படுத்தும் நெகிகிழிக்கு எதிராக கடந்த ஐந்து மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் (Single-Use Plastics – SUP) பயன்பாட்டைத் தடுப்பதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கடந்த ஐந்து மாதங்களில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
1. பறிமுதல் செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள்: 776 டன்
2. விதிக்கப்பட்ட அபராதத் தொகை: ரூ.189 லட்சம் (ரூ.1.89 கோடி)
3. மூடப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள்: 11
4. மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள்: 385
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கான தடையை முறையாகச் செயல்படுத்துதல், அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் தூய்மையான, நெகிழிப் பொருட்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.