

சென்னை,
சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களை பெற்ற அ.தி.மு.க.வில், திடீரென பிளவு ஏற்பட்டது. அதாவது த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 பேரும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறிய 25 பேர் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர். சிலர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். சமரச பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு களையப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நியமித்த புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் சி.வி.சண்முகம் தரப்பினர் சாவியை வழங்கினர்.
தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் இடையே பிளவு ஏற்பட்டபோது விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் யாருக்கு என்பதில் மோதல் போக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.