விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் திடீர் தர்ணா

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் திடீர் தர்ணா
Published on

விழுப்புரம் மாவட்டம் குப்பம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி ஹரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சண்முகம், ராஜன்பாபு ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊராட்சி தலைவர், எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஊராட்சி நிதி ரூ.10 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது. செய்யாத பணிகளுக்கு செய்ததுபோல் கணக்கு காண்பிக்கின்றனர். ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் எந்த பணிகள் குறித்தும் ஊராட்சி மன்ற கூட்டத்தில் பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு குப்பம் ஊராட்சியின் பதிவேடுகளை ஆய்வு செய்து, பணிகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com