கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு
Published on

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் அவர்கள் 5 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி வக்கீல் ராமச்சந்திரன் மூலமாகவும், பள்ளி முதல்வர் சிவசங்கரன் தனக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் சீனிவாசன் மூலமாகவும் தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை கொண்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் உள்ளதால் ஏற்கனவே தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனுவை ஏற்க முடியாது.

எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வக்கீலுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com