

விழுப்புரம்,
விழுப்புரத்தில் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சரண் என்பவரது மகனுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக, கே.கே. சாலை பகுதியில் பிறந்தநாள் பேனர் வைக்கும் பணியில் சரண் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டு வந்தனர். ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மதன் குமார், பூவரசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 4 பேர், பேனர் வைப்பதற்காகச் சென்றுள்ளனர்.
பேனர் வைக்க திட்டமிட்டிருந்த இடத்தில், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று இருந்துள்ளது. புதிய பேனரை வைப்பதற்காக, அங்கிருந்த விநாயகர் சதுர்த்தி பேனரை 4 பேரும் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பேனர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது.
இதில் பேனரில் மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கொடூர விபத்தில், மதன் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.