விநாயகர் சதுர்த்தி: தோவாளை, மதுரை மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.
குமரி,
குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பொதுவாக முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். பிற நாட்களில் விலை குறைவாக இருக்கும்.
இந்த நிலையில், ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 2,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 1 கிலோ மதுரை மல்லிகை ரூ.2,500, முல்லைப் பூ ரூ.1,000, செவ்வந்தி, பிச்சி பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600, ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






