தடையை மீறி ஆர்ப்பாட்டம் - சீமான் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம் - சீமான் கைது
x
தினத்தந்தி 31 Dec 2024 11:34 AM IST (Updated: 31 Dec 2024 12:01 PM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமானை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதையடுத்து, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் கூறப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நான் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீமானை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசார் கைது செய்தபோது "ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை காவல்துறை ஒடுக்குகிறது" என்று சீமான் குற்றம் சாட்டினார்.

1 More update

Next Story