கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கோவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
Published on

கோவை

கோவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வைரஸ் காய்ச்சல்

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. பருவம் தப்பிய வெயில், மழை என்று காலநிலை மாற்றம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

பள்ளி குழத்தைகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பலரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் காய்ச்சல் காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

கோவையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சலுக்கு தனித்தனியாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளோம். தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் முதலில் லேசான காய்ச்சல், உடல்வலி, சோர்வு, தொண்டைவலி போன்றவை ஏற்படுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். அரசு ஆஸ்பத்திரியோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் மூலம் வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

முகக்கவசம்

காய்ச்சல் பாதிப்பு உள்ள பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com