

மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் 7-ந்தேதி பொறுப்பு ஏற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் கொரோனாவை ஒழித்து கட்டுவதிலும், நிர்வாக ரீதியாக மக்களுக்கு உகந்த மாற்றங்களை செய்வதிலும் மு.க.ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மக்களுடைய பயன்பாட்டுக்கு திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் மு.க.ஸ்டாலின் பம்பரம் போல சுழன்று வருகிறார்.அதேநேரத்தில், தன்னுடைய உடல் நலத்தை பாதுகாப்பதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் தவறியது இல்லை. மக்கள் பணிக்கு இடையே தனக்கு அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும், உடலை உறுதி செய்வதற்காகவும், ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் மு.க.ஸ்டாலின் செலவிட்டு வருகிறார். இதற்காக அவர் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
உடற்பயிற்சி
மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம் உண்டு. உடற்பயிற்சி செய்யும்போது, தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தை அதற்கு ஏற்றவாறே மு.க.ஸ்டாலின் மாற்றி அமைத்து கொள்வார். அந்தவகையில், மு.க.ஸ்டாலின் கட்டுமஸ்தான இளைஞராக தோன்றி, புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது.
இதனை உடலை உறுதி செய்யவேண்டும்' என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடலை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.