

விருதுநகர்,
விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதி யில் இயங்கி வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 5 அறைகளில் பட்டாசு உற்பத்தி நடந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று காலையில் அந்த ஆலைக்கு ஆண்களும், பெண்களுமாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தொழிலாளர்கள் பட் டாசு உற்பத்தியில் மும்முரமாக இருந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. உடனே அடுத்தடுத்து இருந்த அறைகளுக் கும் தீ பரவி, அந்த அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கின. இதில் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் சிதறிய நிலையிலும், கருகிப்போய் கிடந்த நிலையிலும் இருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய் இருந்தன. மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கட்டனார்பட்டி வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் ஈஸ்வரி, கணவர் முத்துமாணிக்கம் தலைமறைவு; தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிக வெடி பொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக வெடிகளை தயாரிக்க முயன்றதாலும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்காமல் அதிக வெடிகளை தயாரிக்க முயற்சித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரண நிதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்காம் உள்ளது. இதனால் நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.