ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் மேம்பாட்டுப் பணி... மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

பருவ மழைக்கு முன்னதாக பணிகளை முடித்திட ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் மேம்பாட்டுப் பணி... மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!
Published on: 

சென்னை,

விருகம்பாக்கம் கால்வாயில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், வண்டல் மற்றும் கழிவுகள் தூர்வாரி அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி எஸ் சமீரன்,இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான 44 கால்வாய்களில் தூர்வாருதல் தடுப்புச் சுவர் கட்டுதல், வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (27.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட பகுதியில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டுதல், வேலி அமைத்தல், இயந்திரங்கள் மூலம் வண்டல் மற்றும் கழிவுகள் தூர் வாரும் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், காளியம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால், விருகம்பாக்கம் கால்வாயில் சேருமிடத்தில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை இரண்டு வார காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வு

மேலும், இந்த விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில், பழைய பாலத்தினை அகற்றி ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பருவ மழைக்கு முன்னதாக பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விருகம்பாக்கம் நீர்வழிக்கால்வாய் விருகம்பாக்கத்தில் உள்ள புவனேஷ்வரி நகரிலிருந்து தொடங்கி சின்மயா நகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ காலனி வழியாக கூவம் ஆற்றினை சென்றடைகிறது. விருகம்பாக்கம் நீர்வழிக் கால்வாயின் நீளம் 6.70 கீ.மீ ஆகும். இந்த நீர்வழிக் கால்வாயின் அகலம் 8 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை உள்ளது. இந்த ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் பிரபாகரன், மண்டல அலுவலர் ஆர்.புருசோத்தமன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com