வைரஸ் காய்ச்சல் பரவல்; எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் புதிய வார்டு திறப்பு

கடந்த 20-ந்தேதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 30 குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.
வைரஸ் காய்ச்சல் பரவல்; எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் புதிய வார்டு திறப்பு
Published on: 

சென்னை

வைரஸ் காய்ச்சல் பரவலை அடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகளுடன் புதிய வார்டு திறக்கப்படுகிறது.

இரு மடங்கு

தமிழ்நாட்டில் தற்போது வைரஸ், டெங்கு, உண்ணி போன்ற காய்ச்சல் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் தற்போது அலைமோதி வருகிறது.

கடந்த 20-ந்தேதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 30 குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், அதன்பிறகு பாதிப்பு மிக வேகமாக உயரத்தொடங்கியது. அதன்படி, கடந்த 23-ந்தேதி 58 பேராகவும், 24-ந்தேதி 78 பேராகவும் உயர்ந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 80 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் சிறப்பு வார்டு

நாள்தோறும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, எழும்பூர் மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) 60 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், காய்ச்சல் சிகிச்சைக்கான போதிய மருந்துகள் தடையின்றி கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com