விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? - உதயநிதி கேள்வி

புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளராக இருந்த சங்கர் ஐ.ஏ.எஸ்., தொல்லியல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனால், இப்போது வரை வேளாண்துறைக்கு முழுநேரப் பொறுப்பில் புதிய செயலாளர் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது, உழவர் பெருமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்ட வேளாண்துறை போன்ற ஒரு முக்கியத் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் செயலாளர்கூட இல்லாமல் இருப்பதை என்ன காரணம் சொல்லி இவர்களால் நியாயப்படுத்த முடியும்?

பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், வேளாண்மைத் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமையும், துரிதமான ஒருங்கிணைப்பும் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக, விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படுவதற்கும், மாவட்ட அளவிலான பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இது அவசியமானது. இதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய, துறை அமைச்சரும் முதல்-அமைச்சரும் 'வேறு வேலைகளில்' தான் மும்முரம் காட்டுகின்றனர்.

த.வெ.க. ஆட்சிக்கு வந்ததுமே, பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தார்கள். இயற்கையால் குறுவை பொய்த்து, த.வெ.க. அரசின் சிந்தனையற்ற செயல்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இப்படித் தொடர் ஏமாற்றங்களால் விரக்தியில் உள்ள விவசாயப் பெருமக்கள், தமிழ்நாடெங்கும் போராடி வருகின்றனர்.

நேற்றுகூட, கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வராததால், முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் செய்துள்ளனர். தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் வீராணம் ஏரியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி, சென்னையில் வருகிற 14-ம்தேதி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இத்தகைய சூழலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, உழவர்களின் துயர் துடைப்பதற்கான பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையைப் பொறுப்பு ஏற்பாட்டில் விட்டிருப்பது, வேளாண்குடிப் பெருமக்களின் நலனில் இந்த அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. 'செயல்படாத அமைச்சர், இல்லாத செயலாளர்' எனத் த.வெ.க. ஆட்சியைப் போலவே வேளாண்துறையும் திண்டாடுகிறது.

உலகுக்கே உணவளிக்கும் உழவைக் காப்பாற்றுவதில் இனியும் காலதாமதம் செய்யாமல், புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com