கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
Published on

சென்னை

நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நடிகர் விவேக் நேற்றைய தினம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தடுப்பூசியின் பக்கவிளைவால் நடிகர் விவேக்கிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மருத்துவர் ராஜூ, இன்று காலை நடிகர் விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும், ஆஞ்சியோ சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது நடிகர் விவேக் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார் என்றும் 24 மணி நேரம் கண்காணித்த பிறகுதான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்றும் தெரிவித்த அவர், நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஒரு வாரத்திற்கு முன்பே தடுப்பூசி போட வருவதாக கூறியிருந்தார். அவர் தடுப்பூசி போட்டதற்கும் மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அவர் உடல்நிலை முன்னேற வேண்டும் என்றுதான் அனைவரும் செயல்பட்டு வருகிறோம். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை. மாரடைப்பு தவிர அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com