தொகுதி கண்ணோட்டம்: எழும்பூர் (தனி)

சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் எழும்பூர் (தனி) தொகுதியும் ஒன்று.
தொகுதி கண்ணோட்டம்: எழும்பூர் (தனி)
Published on

சென்னை,

சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் எழும்பூர் (தனி) தொகுதியும் ஒன்று. 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில், 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, நீக்கப்பட்ட பூங்கா நகர் தொகுதியில் இருந்து சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சில இடங்களும், அண்ணாநகர் தொகுதியில் உள்ள சில பகுதிகளும் இணைக்கப்பட்டன.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த தொகுதியில்தான், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் நீதிமன்றம், அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, கங்காதீஸ்வரர் கோயில், பள்ளிக்கல்வி அலுவலக வளாகம் (டி.பி.ஐ.) போன்ற முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி வார்டுகள் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72, 100 முதல் 106 வரை வருகின்றன.

எழும்பூர் (தனி) தொகுதியில், இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. 10 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தே.மு.தி.க., சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1957-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் அன்பழகன், காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். 1962-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாசலம் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1967, 1971, 1977-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்கள் முறையே ஆசைதம்பி, அரங்கண்ணல், எஸ்.மணிமுடி ஆகியோர் வெற்றி பெற்றனர். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எல்.இளையபெருமாள் வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து, 1984, 1989, 1991, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். 1984-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சு.பாலனும், அடுத்த 5 தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதியும் வெற்றி வாகை சூடினர். ஆனால், 2011-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் கே.நல்லதம்பி வெற்றி பெற்றார். கடந்த (2016-ம் ஆண்டு) சட்டமன்ற தேர்தலில், கட்சி மாறி அ.தி.மு.க. சார்பில் களம் கண்ட பரிதிஇளம்வழுதி தோல்வியை தழுவினார். தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் 10 ஆயிரத்து 679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை தவிர, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்கள் உள்பட 19 பேர் டெபாசிட் இழந்தனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்குகள் 1,91,450

பதிவான வாக்குகள் 1,20,669

கே.எஸ்.ரவிச்சந்திரன் (தி.மு.க.) 55,060

பரிதி இளம்வழுதி (அ.தி.மு.க.) 44,381

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அதிகம் கொண்ட எழும்பூர் தொகுதியில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பிடும்படி இருக்கின்றனர். இதுதவிர, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மக்களும், வட மாநிலத்தவர்களும் இந்த தொகுதியில் அதிக அளவில் வசிக்கின்றனர். சாதி வாரியாக பார்க்கும்போது, பல தரப்பினரும் இங்கு உள்ளனர். போக்குவரத்து நெரிசல், கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சினை முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. கொசுத்தொல்லையும் தீர்க்கவே முடியாத பிரச்சினையாக இருக்கிறது.

தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலை அருகே 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வட்ட வடிவ மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மேலும், முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, எழும்பூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 450 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் நீக்கம் என்ற வகையில், தற்போது 815 வாக்காளர்களே அதிகரித்துள்ளனர். எழும்பூர் (தனி) தொகுதி எப்போதும் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. அதே சூழ்நிலைதான் இந்த தேர்தலிலும் தென்படுகிறது.

நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலில் (2021) அ.தி.மு.க. கூட்டணியில் எழும்பூர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. வேட்பாளர் இ.பரந்தாமன் களம் காண்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com