வாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக பொய்ப்புகார் அளித்தால் 6 மாதம் சிறை தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

வாக்குப்பதிவின்போது வாக்கு வேறு சின்னத்தில் பதிவாவதாக பொய்ப்புகார் அளித்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக பொய்ப்புகார் அளித்தால் 6 மாதம் சிறை தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த பிப்ரவரி 23, 24-ந் தேதிகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கள் மூலம் 7.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி அறிவதற்காக சரிபார்ப்பு களப்பணி தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் இடம் மாறினால் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டையில் பழைய முகவரி இருந்தால்கூட, மாறிச்சென்ற இடத்தில் வாக்களிக்கலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரம் பொருத்தப்பட்டு இருக்கும். வாக்களிக்கும்போது வேறு சின்னத்தில் வாக்கு பதிவானதாக தெரிந்தால், அதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அவருக்கு தனி வரிசை எண் தரப்பட்டு மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். அப்போதும் வேறு சின்னத்துக்கு அவரது வாக்கு சென்றதாக கண்டறியப்பட்டால் அவரது புகார் ஏற்கப்படும்.

ஆனால் அவரது புகார் பொய் என்று தெரியவந்தால் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 177-ம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். அதன்படி 6 மாத சிறைத் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனை விதிக்கப்படும். தனி வரிசை எண்ணில் அளிக்கப்படும் ஓட்டுகள் எண்ணிக்கையின்போது கழிக்கப்பட்டுவிடும்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு பிப்ரவரி 27-ந் தேதிவரை 27,775 அழைப்புகள் வந்தன. சராசரியாக நாளொன்றுக்கு 700 முதல் 800 அழைப்புகள் வருகின்றன. புகார் சொல்வதற்காக 2,546 அழைப்புகள் வந்தன. அவற்றில் 947 தவிர மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com