நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் தோல்வி


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் தோல்வி
x

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.

தென்காசி


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராஜூ துணைத்தலைவராக உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் உமா மகேஸ்வரியும், அதிமுக முத்துலட்சுமியும் தலா 15 வாக்குகள் பெற்றனர். சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தேர்வானார். அவர் நகர்மன்ற தலைவராக தேர்வானது முதற்கொண்டே அவருக்கும் கவுன்சிலர்களுக்கு இடையே ஏழாம் பொருத்தம்தான்.

ஒரு சில மாதங்கள் மட்டும் நகர்மன்ற கூட்டம் அமைதியாக நடந்தது. அப்புறம் விவாதம் வாக்குவாதம் என்று தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. இந்த சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள். இந்த 30 கவுன்சிலர்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரிக்கு எதிராக நிற்கும்படி உமா மகேஸ்வரியின் நடவடிக்கை இருந்தது என்கிறார்கள்.

சங்கரன் கோவில் நகராட்சியில் கடந்த பல மாதங்களாகவே அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்று சொல்லி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் உமா மகேஸ்வரியிடம் முறையிட்டு வந்துள்ளனர். அவர்களின் முறையீட்டுக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்ததால் உமா மகேஸ்வரிக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.

நகராட்சி கூட்டங்களிலும் இந்த மோதல் எதிரொலித்து வந்துள்ளது. அடிக்கடி உமா மகேஸ்வரியுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வந்துள்ளனர்.இந்த விவகாரம் வலுத்துக்கொண்டே சென்றதால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் சுயேட்சைகள் என்று எல்லோரும் ஒன்றுகூடி கடந்த 2023 ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது திமுக தரப்பில் தலையீடு இருந்து சமரசம் செய்து வைக்கப்பட்டது.

இதனால் அன்றைக்கு உமா மகேஸ்வரி பதவி தப்பியது. ஆனாலும், இந்த மோதல் போக்கு நீடித்தது. இதனால் 26 கவுன்சிலர்கள் ஒன்று கூடி, உமா மகேஸ்வரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் கடந்த மாதம் 2ஆம் தேதி அன்று மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் அப்போது ஆணையாளர் உறுதி அளித்திருந்தார்.

இந்த சூழலில் கடந்த 2-ம் தேதியன்று உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 29 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது. வாக்கெடுப்பில் 28 ஆதரவு வாக்குகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. உமா மகேஸ்வரி பதவியை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை உமா மகேஸ்வரி நாடிய நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார்.

இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.

1 More update

Next Story