வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

இந்தப் பணிகள் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது, முகவரி மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் அவற்றை செய்யலாம் என்றாலும் கூட, இது ஒரு சிறப்பு வாய்ப்பாக அளிக்கப்படுகிறது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க தமிழகம் முழுவதும் இன்று (நவ., 24) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

18 வயது முடிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது 17 வயது முடியும்போது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தி ஆன பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும்.18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் கூடுதல் இடங்களில் பெயர் பதிவு இருந்தால் அதை நீக்குவது, திருத்தங்கள், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு போன்ற வசதிகளை முகாம் நடக்கும் காலங்களில் பெறலாம். அதற்கான படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கலாம். www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும்' வாக்காளர் உதவி' கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com