வாக்குப்பதிவு சதவீதம் குறைவு: தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை - பிரேமலதா

மாநகரங்களில் வசிக்கும் வசதியானவர்கள், படித்தவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு சதவீதம் குறைவு: தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை - பிரேமலதா
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில், 69.94 சதவீதம் வாக்குகள்பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட 2.5 சதவீதம் குறைவாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தநிலையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ் கட்டணம், ரெயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தேர்தல் வரும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தான் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது.நாம் யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன? என்ன மாற்றம் வரப்போகிறது? என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.ஏற்கனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டு மல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட ஆளில்லை.

யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற மக்களின் வேதனையான மன நிலையை தான் இது நிரூபிக்கிறது. இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால் ஆளும் ஆட்சியாளர்களோ ஓட்டுக்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும், வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்கணும் என்கிற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர். எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com