படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வாக்காளர்கள் சிரமப்படுகிறார்கள் - கராத்தே தியாகராஜன்


படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வாக்காளர்கள் சிரமப்படுகிறார்கள் - கராத்தே தியாகராஜன்
x

கோப்புப்படம்

படிவம் 6-ஐ வினியோகிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கராத்தே தியாகராஜன் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே வாக்காளராக இருந்து 2025 சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்துவது குறித்து சந்தேகம் எழுப்பினேன். ஏனெனில், படிவம் 6-ஐ புதிய வாக்காளர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

முந்தைய வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே வாக்காளராக இருந்த நபர் படிவம் 6-ஐ பயன்படுத்தி தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பித்தால் அது தண்டனைக்குரிய தவறான அறிவிப்பை செய்தவராக கருதப்படுவார்கள். இந்த பிரச்சினை குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தெளிவுபடுத்தப்படும் என தெரிவித்தனர்.

மறுபுறம் தொகுதி தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் படிவம் 6-ஐ வினியோகித்து வருகிறார்கள். இப்படிவம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை இந்த பிரச்சினை தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க சிரமப்படுகிறார்கள்.

இதுகுறித்து விரைவில் தெளிவுபடுத்தாவிட்டால் அத்தகைய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அரசியல் சாசன உரிமை என்பதால் விரைவில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story