அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு: கட்சிகளிடம் நம்பிக்கை கோருகிறார் விஜய்

அ.தி.மு.க.வின் இரு தரப்புக்கும் எத்தனை பேர் ஆதரவு என்பது இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தெரியவரும்.
அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு: கட்சிகளிடம் நம்பிக்கை கோருகிறார் விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் 2-வது இடத்தையும், அ.தி.மு.க. கூட் டணி 53 இடங்களுடன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. அக்கட்சி மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் த.வெ.க. ஆட் சிக்கு ஆதரவு கொடுப்பது என்றும், கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். மேலும் சட்டசபை அ.தி.மு.க. குழு தலைவராக வேலுமணியையும் தேர்வு செய்தனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அவரது தரப்பினர், தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் அதற்கான கடிதத்தை நேற்று முன்தினம் கொடுத்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தை சி.வி.சண்முகம் தரப்பினரும் கொடுத்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் வலுத்துள்ள நிலையில், சி.வி.சண்முகம் குழுவை முதல்-அமைச்சர் விஜய் நேற்று மாலை சந்தித்தார். தொடர்ந்து 2-வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேற்று விஜய் சந்தித்தார். அதன்படி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலை சென்றார்.

அங்கு சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்றனர். அப்போது விஜய்யிடம் தங்களது தரப்புக்கு 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்நிலையில் தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) சட்ட சபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிய, அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். எதிர்க்கட்சியினரும் இதில் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். சட்டசபையில் வீற்றிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெறவேண்டும்.

அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்று விட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். ஆனால் த.வெ.க. அரசு, இந்த தீர்மானத்தில் தோற்க வாய்ப்பு மிகமிக குறைவாக உள்ளது.

எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் தங்களுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்தார். சி.வி.சண்முகம் தரப்பு தங்களுக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறினார். இரு தரப்புக்கும் எத்தனை பேர் ஆதரவு என்பது இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com