

கடலூர்,
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூவனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கினர். இதில் ரெயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்து ரெயில்வே ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ரெயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ரெயிலில் கல்வீசி கண்ணாடியை உடைத்தது 2 சிறுவர்கள் என் பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.