

சென்னை,
3 வருடங்களுக்கு ஒரு முறை இவர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வரைமுறை செய்யப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்டு 21ந் தேதியுடன் 12வது ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைந்தது. புதிய ஓய்வூதிய ஒப்பந்தம் வரைமுறை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 13வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு எட்டப்படாததால் மே 15ந் தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன், துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.500 கோடியுடன், கூடுதலாக ரூ.250 கோடி விடுவிக்க முதல்அமைச்சர் ஒப்புதல் அளித்தார். என்றாலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்துவதில் தீவிரமாக இருந்தனர்.
இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்க்கவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 5வது கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.
2வது நாளாக நேற்று தேனாம்பேட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்தை நடந்தது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஷ்மின் பேகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்பட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கியது. ஒரு மணி நேரம் கடந்தநிலையில் இதிலும் சமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அண்ணா தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசப்போவதாக கூறி சென்றனர். இதையடுத்து பேச்சுவார்த்தை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்அமைச்சரை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணா தொழிற்சங்கத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 45 நிமிடங்கள் கடந்த நிலையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை நாளை (இன்று) தொடர்ந்து நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் ஆர்.சின்னச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு காலகட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகள் முன்னெடுக்கப்படும்போதெல்லாம் அரசின் நிதியில் இருந்து எடுத்து கொடுத்து தான் போக்குவரத்து கழகத்தை நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இந்தமுறை பல ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை, தமிழக அரசே ஏற்கவேண்டும். இதுகுறித்து நாங்கள் போக்குவரத்து துறை அமைச்சருடன் சென்று முதல்அமைச்சரை சந்தித்தோம். இருக்கக்கூடிய நிலையையும், தொழிலாளர்களின் கஷ்டங்களையும் எடுத்துக்கூறினோம்.
மற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து நோட்டீசு வழங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்களை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றன, எனவே சிரமங்கள் இருந்தாலும் சில ஆயிரம் கோடிகளை உயர்த்திக்கொடுத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
எங்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதல்அமைச்சர், நாளை (இன்று) 12 மணிக்கு பல்லவன் இல்லத்தில் இறுதியாக கூட்டம் நடத்துங்கள். அதில் துறை அமைச்சர் கலந்துகொள்வார். அவரிடம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எவ்வளவு கோடிகள் உயர்த்தி கொடுக்கப்படும்? என்பதை கூறி அனுப்புகிறேன் என்றார்.
எனவே நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறோம். எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என்று நாளை (இன்று) தான் தெரியும். நிச்சயம் கூடுதலாக தொகை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. உரிய பதில் வரும் வரையில் சமரசத்துக்கு இடம் கிடையாது. முதல்அமைச்சருடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நாளை (இன்று) இறுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறுகிறார்கள். நாளை என்ன நடக்கும்? என்று பார்ப்போம். பேச்சுவார்த்தைக்கு செல்வோம். ஆனால் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படவில்லை என்று சொன்னால் திட்டமிட்டபடி 15ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவது உறுதி என்றார்.
எனவே போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்வார்களா? அல்லது திட்டமிட்டபடி நாளை (திங்கட்கிழமை) வேலைநிறுத்த போராட்டம் தொடங்குமா? என்பது இன்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரியவரும்.