மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
Published on

சென்னை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவி சாவித்திரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அவ்வப்போது மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் கொடுக்காத போது அவரை தாக்கி கொடுமைபடுத்தி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 28.3.2020 அன்று ரவி, தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ரவி, மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்தார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், ஆதரவற்ற நிலையில் இருந்து வரும் 11-வது வகுப்பு படித்து வரும் ரவியின் மகன் மற்றும் 8-வது படித்து வரும் ரவியின் மகள் ஆகியோருக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com