போதிய இருக்கைகள் இல்லாததால் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்

மானாமதுரை பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாததால் இங்கு வரும் பயணிகள் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.
போதிய இருக்கைகள் இல்லாததால் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்
Published on

மானாமதுரை,

மானாமதுரை பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாததால் இங்கு வரும் பயணிகள் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.

போதிய இருக்கைகள்

மானாமதுரை நகர் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. மாவட்டத்தில் முக்கியமான நகரமாக இது உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் இவ்வழியாக செல்கிறது. மானாமதுரையை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், வியாபாரம் மற்றும் கூலி வேலை செய்து வருவதால் அவர்கள் தங்களது அடிப்படை தேவையான பொருட்களை வாங்க மானாமதுரைக்கு வந்து செல்வது வழக்கம்.

இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தினந்தோறும் மானாமதுரை பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் போதியளவில் பயணிகள் இருக்கை வசதிகள் இல்லை.

பயணிகள் கோரிக்கை

தற்போது உள்ள இருக்கைகளில் 20 பேர் வரை மட்டுமே அமரும் வகையில் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் முதியோர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் நீண்ட நேரம் கிராம மக்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள்கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இங்கு இலவச கழிப்பறை மிகவும் அசுத்தமான முறையில், பராமரிப்பு இல்லாததால் அதை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பஸ் நிலையத்தில் கூடுதலாக பயணிகள் இருக்கைகள் அமைக்கவும், மற்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com