மின் விளக்குகள் அமைக்க பூமி பூஜைக்கு வராத அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

மின் விளக்குகள் அமைக்க பூமி பூஜைக்கு வராத அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மின் விளக்குகள் அமைக்க பூமி பூஜைக்கு வராத அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
Published on

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் 4-வது வார்டில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. அந்த இடங்களில் மீண்டும் 81 மின் விளக்குகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை மாநகராட்சி மின்வாரிய இளநிலை பொறியாளர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறும் என வார்டு கவுன்சிலர் ஜெயராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதற்காக கவுன்சிலர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஜோதி நகர் சந்திப்பில் காத்திருந்தனர். ஆனால் மதியம் 12 மணிவரை ஆகியும் அதிகாரிகள் யாரும் பூமி பூஜை போடவரவில்லை. செல்போனில் அழைத்தாலும் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கவுன்சிலர் ஜெயராமன், ஊர் நிர்வாகிகளுடன் ஜோதி நகர் முருகன் கோவில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் ஊர் நிர்வாகிகள் மண்டல உதவி கமிஷனர் சங்கரனிடம், இது குறித்து புகார் தெரிவித்தனர். உடனடியாக அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்னர் மின்விளக்கு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும்படி கூறினார். அதற்கு அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) பணிகளை தொடங்குவதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com