தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கும் நடைபயணம்: அமித்ஷா பேச்சு

அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கும் நடைபயணம்: அமித்ஷா பேச்சு
Published on

ராமநாதபுரம்,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்". "என் மண் என் மக்கள் நடைபயணம்" இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் கொண்டுசேர்ப்பதற்கான நடைபயணமாகும். இந்த நடைபயணம் இந்திய நாட்டின் 130 கோடி மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தக்கூடிய நடைபயணம்.

இந்த நடைபயணம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்படுத்தக்கூடியது இந்த நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற அரசை உருவாக்கும் நடைபயணம்.

இந்த நடைபயணத்தை தொடங்கி 700 கிலோமீட்டர் தூரம் நடந்து தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். இந்த நடைபயணம் அரசியல் சார்ந்தது இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்காக நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியை அண்ணாமலை கொண்டுசெல்லப்போகிறார். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக ஊழல்கள், குடும்ப ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

காங்கிரஸ், திமுக என்றால் நிலக்கரி, 2ஜி ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். மீனவர்களின் பிரச்சினைக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் காரணம். காங்கிரஸ் கூட்டணிதான் இலங்கையில் தமிழர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கின்றனர்.

நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும்.

பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிக்கல், விமானப்படை தாக்குதல்களை பிரதமர் மோடி நடத்தினார். சென்னை மெட்ரோ ரெயில் தவிர, பிற ரெயில் திட்டங்களுக்காக 34 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தந்திருக்கிறது. எங்களின் அரசு 45 ஆயிரம் கோடி ரூபாய், ஆலய அபிவிருத்திக்காக தந்திருக்கிறது. 2 வந்தேபாரத் ரெயில்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கள் அரசு ராணுவ தடவாடங்கள் உற்பத்திக்கு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை இங்கு கொண்டுவந்துள்ளது. 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறை வசதிக்கான திட்டத்தை பிரதமர் கொண்டுவந்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com