‘குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்து எச்சரிக்கை’ - ஐகோர்ட்டு உத்தரவு

6 மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்து எச்சரிக்கை’ - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், “பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக லக்னோ, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி இமசால பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள், உப்பு, சர்க்கரை பாக்கெட்டுகளில் ஆய்வு செய்தபோது அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். மேலும், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய குடிநீர் பாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com