139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த தி.மு.க. என்று குறிப்பிட்டு அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் ரூ.20 கோடியை செலவழித்தது அம்பலம்! அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய தி.மு.க.வின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது!" என்று தெரிவித்திருந்தது.
இதனை அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.14 லட்சமா? என 'நெட்டிசன்'களும் சென்னை மாநகராட்சியை வசைபாடி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67 ஆயிரத்து 806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. இதில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 139 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 371 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதற்காக 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.3 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரம் செலவழிக்கப்பட்டு உள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையின் கால்நடை மருத்துவப்பிரிவு தெரிவித்து உள்ளது. தவறான தகவலை பரப்பாதீர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






