செங்கோட்டையனின் டெல்லி பயணம் தோல்வி? அமித்ஷா ஆதரவான பதில் சொல்லவில்லை என தகவல்

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் செங்கோட்டையனை சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வகித்து வந்த 2 கட்சி பதவிகளும் அவரிடம் இருந்து அதிரடியாக பறிக்கப்பட்டன.அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய செங்கோட்டையனுக்கு தொடக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்து நடவடிக்கைக்கு அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதுபோல தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முடிவுக்கு கட்டுப்படுவதை உறுதிப்படுத்தினார்கள். இதனால் வேறு வழி தெரியாத செங்கோட்டையன் நேற்று முன்தினம் திடீரென கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.மன நிம்மதிக்காக அரித்துவாரில் சாமி கும்பிட போவதாக ஏமாற்றி விட்டு சென்ற அவர் டெல்லியில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியதாக நேற்று நிருபர்களிடம் கூறினார்.
அமித்ஷாவை சந்தித்து பேசியதன் மூலம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க முடியும் என்று செங்கோட்டையன் முயற்சிகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் அவரது முயற்சி வெற்றி பெற வில்லை என்று தெரியவந்துள்ளது.அமித்ஷாவுடனோ அல்லது நிர்மலா சீதாராமனுடனோ அறையில் அமர்ந்து செங்கோட்டையன் நீண்ட நேரம் விவாதிக்கவில்லை என்று டெல்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் துணை ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இருந்ததால் செங்கோட்டையனை சந்திப்பதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமித்ஷாவுடனும், நிர்மலா சீதாராமனுடனும் செங்கோட்டையன் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இது செங்கோட்டையனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.மத்திய மந்திரி அமித்ஷாவுடன் செங்கோட்டையன் அ.தி.மு.க. விவகாரம் பற்றி விவாதித்தால் அது அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டதாகி விடும் என்பதால் பாஜக மேலிட தலைவர்கள் இந்த விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாக தெரிகிறது.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் எந்த உறுதிமொழியும் கொடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் ஆதர வாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் விவாதித்தார். அதன் அடிப்படையில் அவர் விரைவில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.






