ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? - ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்

கூடுதல் கட்டணம், பணிப்பெண்கள் சேவையுடன் செல்லும் ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? - ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்
Published on

மேட்டுப்பாளையம்,

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரெயில் சேவை, ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து, கடந்த 5-ந்தேதி முதல் டி.என்.43 என்ற தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு மலை ரெயில் சேவையாக இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாதாரணமாக மலை ரெயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால், சாதாரண பொதுமக்கள் இந்த ரெயிலில் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளதுடன், இந்த ரெயில் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மலை ரெயிலை தனியாருக்கு விடப்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்த ரெயில்வே அதிகாரிகள், மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயிலை தனியாரிடம் கொடுக்கவில்லை. கடந்த 5-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை மட்டுமே 13 டிரிப் இயக்கிக் கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா பீதி குறைந்து வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் போது ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்படும். இது தவிர தனியார் மூலம் இயக்கப்படும் சேவைக்காக மற்றொரு ரெயில் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய முடியாது என்று பொது மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com