வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே பொங்கல் தினத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குமா? பாதுகாப்பு கமிஷனர் 10-ந்தேதி ஆய்வு

டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவை பொங்கல் தினத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வருகிற 10-ந்தேதி ஆய்வு மேற்கொள்கிறார்.
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே பொங்கல் தினத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குமா? பாதுகாப்பு கமிஷனர் 10-ந்தேதி ஆய்வு
Published on

சென்னை,

சென்னை நகரில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்தும் நோக்கில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கோயம்பேடு- ஆலந்தூர், விமான நிலையம்- சின்னமலை, பரங்கிமலை- சென்டிரல், விமானநிலையம்- சென்டிரல், சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.

இந்த புதிய வழித்தடத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் முடிந்தது. அதன்பின்னர் கடந்த 7-ந்தேதி மெட்ரோ ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

அப்போது அந்த ரெயிலில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் மற்றும் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

இதையடுத்து இந்த வழித்தடத்தில் ஆய்வு நடத்தி சேவையை தொடங்க அனுமதி அளிக்குமாறு ரெயில்வே பாதுகாப்புத்துறை (தெற்கு மண்டலம்) கமிஷனர் மனோகரனுக்கு, மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடிதம் அனுப்பியது.

அதன்படி வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்தவுடன் உடனடியாக அனுமதி அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இல்லையெனில், நிச்சயம் ஜனவரி மாத இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் ஓடும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com