திருப்பூர் சோழமாதேவியில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

குப்பைகளை பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகளின் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் விளைநிலங்கள் மற்றும் பாசன வாய்க்காலையொட்டி குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் பாசன நீர் மற்றும் விளைநிலங்கள் பாழானதுடன், சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வந்தன.
இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து அந்த பகுதியிலுள்ள குப்பைகளை பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகளின் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெருமளவு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த மண் குவியலை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் மக்கி, விவசாயத்துக்கு ஏற்ற வளம் நிறைந்த மண்ணாக மாறியுள்ள நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லாத நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. எனவே இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






