வங்கியில் திருடுவது எப்படி? யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கிய எம்.பி.ஏ. பட்டதாரி

எம்.பி.ஏ. பட்டதாரியான லெனின், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
நிதி நிறுவனத்தில் கொள்ளை
Published on

உசிலம்பட்டி,

ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த ரூ.5 லட்சத்தை பெறுவதற்காக யூடியூப் வீடியோ பார்த்து நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற எம்.பி.ஏ. பட்டதாரி, போலீசிடம் சிக்கினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மகன் லெனின் (வயது 30). இவர் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அங்கு குறைந்த சம்பளம் கிடைத்ததாக கூறி வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்.

இங்கு ஆன்லைன் மூலம் சூதாட தொடங்கினார். அதில் சுமார் ரூ.5 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை சம்பாதிப்பது எப்படி? என பல வழிகளை தேடினாராம். அந்த சமயத்தில் யூ-டியூபில் வங்கியில் திருடுவது எப்படி? அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பது சம்பந்தமான வீடியோக்களை பார்த்து உள்ளார். பின்னர் திருடுவதற்கான உபகரணங்களை ஆன்லைன் மூலம் வாங்கினார்.

உசிலம்பட்டியில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்களை நோட்டமிட்டுள்ளார். அதன்படி அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிப்பது என முடிவு செய்தார். சம்பவத்தன்று நள்ளிரவு அந்த நிதிநிறுவன பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த உசிலம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, காவலர் அன்புகுமார் ஆகியோர் அந்த வழியாக சென்றனர். அவர்களை பார்த்ததும், அங்கிருந்து லெனின் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் , நிதி நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு இருந்த பூட்டை உடைக்க முயன்றது தெரியவந்தது.

நிதிநிறுவன வாசலில் இருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் பூட்டை உடைக்க பயன்படும் உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து அங்கிருந்து தப்பியவரை போலீசார் தேடினர். இருட்டான பகுதியில் பதுங்கி இருந்த லெனினை போலீசார் பிடித்து, உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றதை லெனின் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com