

தென்காசி,
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 3 நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நேற்று முன்தினம் மழை குறைந்ததால் நீர்வரத்து சீரானது. இதனால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று காலை மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் மீண்டும் தண்ணீர்வரத்து அதிகரித்தது. எனவே, பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக முன்னதாகவே குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் இன்று சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இருந்தபோதும் பழைய குற்றலாம், சிற்றருவி, புலிஅருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு 6-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கதடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீர்நிலையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பாநதி, ராமநதி, கடனாநதி, குண்டாறு உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பொதுமக்களுக்கு தேவை ஏற்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்ணிற்கும், 04633-290546 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.