குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

விடுமுறை தினமான இன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அருவிகளில் மிதமான நீர்வரத்து

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு உள்ள பிரதான அருவிகள் மற்றும் சிற்றருவிகளில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் சற்று அதிகரித்துள்ளது.

குறிப்பாக புலி அருவி, சிற்றருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் வகையில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

ஐந்தருவியில் உற்சாக குளியல்

ஐந்தருவியில் உள்ள 5 கிளைகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. குடும்பத்துடன் வந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்தவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மெயின் அருவியில் குறைந்த நீர்வரத்து

அதே நேரத்தில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும், குற்றாலம் பகுதியில் நிலவும் இதமான காலநிலையும், சில அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் விழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை தினமான இன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com